×

பதவி வாங்கி தருவதாக பல லட்சம் சுருட்டிய மாஜி மந்திரியின் உதவியாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மா ஜி உளறல் மந்திரி வாங்கி கட்டிக்கிட்டாராமே.. என்னா விஷயம்..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் பெற்ற நகரில், இலைக்கட்சி சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இரு மாஜி மந்திரிகளான உளறல்காரரும், ஊர்ப்பெயர் கொண்டவரும் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்கள் மத்தியில் உளறல் மாஜி மந்திரியானவர் உச்சக்கட்டமாக உளறிக் கொட்டினார். இதில் முதல்வரை மீண்டும் முதல்வராக்குவோம் எனக்கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். இது வலைத்தளங்களில் செமையா வைரலானது. இதை கேட்டு நொந்துபோன சேலத்துக்காரர், ‘ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுத்தோம். கடைசியிலே இவர் ஒருத்தரால, போராட்டமே காமெடியா போயிருச்சேப்பா… ஏன் இப்படி பண்றாரு…

இவரை எல்லாம் ஏன் இதுபோன்ற இடங்களில் பேச சொல்றீங்க..’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் கடிந்திருக்கிறார். பேசியவருக்கும் கடும் டோஸ் விழுந்ததாக பேசிக்கிறாங்க… ஆர்ப்பாட்டத்தில் இன்ெனான்றையும் பேசினார். அதாவது, ‘பிரதமர் உலகத்திற்கே தலைவரா இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஆகட்டும். ரஷ்ய ஜனாதிபதி ஆகட்டும். மோடிதான், அவர்களுக்கெல்லாம் பஞ்சாயத்து செய்து வருகிறார்’ என பேசினார். இதைக்கேட்ட தாமரைக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள், ‘‘எங்க தலைவரு பஞ்சாயத்து பண்ணுனார்னு இல்லாதது பொல்லாததை சொல்லி பேரைக் கெடுக்குறாரே… உள்நாட்டிலேயே பஞ்சாயத்துப் பேச வேண்டியது நிறைய கிடக்கு…

இதுல வெளிநாட்டு அதிபர்களுக்கு எல்லாம் நம்மாளு எங்கே பஞ்சாயத்து பண்ணப் போக… தேவையில்லாம பேச வேண்டாம்னு சொல்லுங்கப்பா…’ என லோக்கல் பிரமுகர்களிடம் கூறியுள்ளனர். சொந்தக்கட்சி, கூட்டணிக்கட்சி என பார்க்காமல், சகட்டு மேனிக்கு பேசி வருவதால், இவருக்கு கடிவாளம் போடலாமா என சேலத்துக்காரர் யோசித்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி வட்டார பரபரப்பு என்ன..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடல் சூழ்ந்த மாவட்டத்தின் நகரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக இருந்த, காதலர்களுக்கு மிகவும் பிடித்தமான பூவின் பெயரை கொண்ட பெண்மணி, லட்சங்களை வாரி குவிக்க முயன்ற சம்பவம், அந்த ஊரில் உள்ள ஒட்டு மொத்த காக்கிகளையும் கலங்கடித்து உள்ளதாம்.

போதகரின் மகன் சம்பந்தப்பட்ட காதல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க, 2, 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்திய அந்த எஸ்.ஐ., கடைசியாக 50 லகரம் வரை கேட்டாராம். அதிர்ந்து போன அந்த பையனின் தந்தையான போதகர், பாதிக்கப்பட்ட பெண்ணிடமே இவ்வளவு ரூபாய்க்கு நான் எங்கம்மா போவேன் என கதறி இருக்கிறார். நான் ரூபாயே கேட்கவில்லை. எனக்கு ரூபாயெல்லாம் வேண்டாம். உங்க பையனும் வேண்டாம். செல்போனில் உள்ள எனது படங்களை மட்டும் அழிக்க சொல்லுங்க. செல்போனை என் கண் முன்னால உடைக்கணும். இனி என் வாழ்கையில தலையிட கூடாது என்று மட்டும் கூறி உள்ளார்.

அதன் பிறகு தான், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல், அந்த எஸ்.ஐ. பெண்மணி, பெரிய தொகையை கறக்க ஆசைப்பட்டது தெரிஞ்சி இருக்கு. 50 லகரத்தில் ஆரம்பிச்சாதான், தனக்கு ரூ.5 லகரமாவது கிடைக்கும் என ஐடியா போட்டு இருக்கிறார். ஆனால் விவகாரம் மாவட்ட காக்கியின் உயர் அதிகாரிக்கு செல்ல, அந்த எஸ்.ஐ. பெண்மணிக்கு செம டோஸ் விழுந்திருக்கிறது. பிறகு கெஞ்சி கூத்தாடியதால், ஸ்டேஷன் மட்டும் மாற்றி உத்தரவு வந்திருக்காம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உதவி செயற்பொறியாளர் பதவி வாங்கி தருவதாக கூறி பல லட்சத்தை சுருட்டியிருக்காராமே மாஜி அமைச்சரின் உதவியாளர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சியில் சேலத்துக்காரர் அணியில் மாஜி அமைச்சர் இருந்து வருகிறார். மாஜி அமைச்சரின் உதவியாளர் கடைசி எழுத்தில் முடியக்கூடிய ராஜன் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் பதவி வாங்கி தருவதாக அந்த அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்த அலுவலர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த அவரும், அவரிடம் ரூ.3 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்டப்படி உயர் பதவியை வாங்கி தரவில்லை. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த அலுவலர், தீவிரமாக விசாரிக்காமல் டூபாக்கூர் நபரை நம்பி உயர் பதவிக்காக ஆசைப்பட்டு பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டாமே.

வெளியில் தெரிந்தால் அசிங்கமாகி விடுமே என நண்பர்களிடம் தற்போது புலம்பி வருகிறார். இந்த தகவல் மாஜி அமைச்சரின் காதுக்கு சென்றது. மின்வாரிய அலுவலகத்தில் பதவி உயர்வு வாங்கி தருவதாக தனது பெயரை, நமது உதவியாளரே பயன்படுத்தி விட்டாரே. இந்த தகவல் மீடியாவுக்கு கசிந்தால் கெட்ட பெயர் ஆகி விடுமே என உச்சக்கட்ட டென்சனில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் சேலம்காரரும், தேனிக்காரரும் பிரிந்து விட்டனர். சேலம்காரரின் கை ஓங்கி கட்சியும், சின்னமும் அவருக்கு சென்று விட்டது. இதனால் தேனிக்காரின் பின்னால் அணிவகுத்து நின்றவர்களின் நிலை இன்று அந்தோ பரிதாபமாகப் போயுள்ளதாம்.

தென்மாவட்டங்களிலும் வலு சேர்க்கலாம் என்று தேனிக்காரரும், குக்கரும் இணைந்து நின்றாலும் அவர்களது ஆதரவாளர்கள் சோர்ந்துவிட்டனராம். ஒருகாலத்தில் குக்கர் காரருக்கு பலமாக இருந்த அல்வா மாவட்டமும் இன்று அவரை கைகழுவி விட்டது. தேனியும், குக்கரும் சேர்ந்தாலும் இனி பருப்பும் வேகாது, விசில் சத்தமும் கேட்காது என்ற முடிவுக்கு அவரது தென் மாவட்ட ஆதரவாளர்களும் வந்து விட்டனர்.

சமீபத்தில் தேனிக்காரரின் அணியில் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் பெயரைக் கொண்ட நெல்லைக்காரர் சேலம்காரரை சந்தித்து அவரது அணியில் இணைந்து விட்டார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இருக்கும் மிச்சம் பேரையும் சேலம்காரர் தனது அணிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால் தென்மாவட்டத்தில் தன் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வேண்டுமென குக்கர்காரர் விரைவில் அல்வா மாவட்டத்திற்கு விசிட் அடிக்கிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

The post பதவி வாங்கி தருவதாக பல லட்சம் சுருட்டிய மாஜி மந்திரியின் உதவியாளர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji ,minister ,Ma ji Mantri Bought ,peter ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி